நாமக்கல், ஜூலை 10:
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி, மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு துறை திட்டங்களின் நிலையை ஆய்வு செய்தார்.
இன்று காலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திரன், மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.க்கள் , எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 139 புதிய பணிகளுக்கு ரூ.87 கோடி 38 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.10 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 36 திட்டங்களை திறந்து வைத்தார். பின்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 2,001 பேருக்கு ரூ.33 கோடி 18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
மாலை நேரத்தில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடம் திறந்து வைத்து, மாவட்டத்தின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் வெற்றியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்தனர்.