அன்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! – மு.க. ஸ்டாலின்

Democratic forces in DMK alliance - MK Stalin

சென்னை, பிப்ரவரி 27:

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(பிப். 27) திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ. பன்னீர்செல்வம் தாய்க் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர்.

இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.

நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!