சென்னை, அக்டோபர் 23:
வட உள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை அன்று பிற்பகல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது வானிலை மையம், அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும், தாழ்வு பகுதியே கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், “வட உள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது குறைந்த தாழ்வு நிலையிலேயே காணப்படுகிறது. இன்று காலை 5.30 மணியளவில், அது வடக்கு உள்தமிழ்நாடு மற்றும் தெற்கு உள் கர்நாடக எல்லைப்பகுதியில் மையம் கொண்டுள்ளது,”என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு உள் கர்நாடகத்தில் மேலும் வலுவிழக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை மாற்றத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பதிவாகக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் மழை தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.