சென்னை, ஜூலை 7:
ஈரான் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 40 லட்சம் ஆப்கானியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுடனான போருக்குப்பிறகு உள்நாட்டு பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி, ஆப்கானியர்களை ஈரான் அரசு வெளியேற்றி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீண்டும் ஏற்பட்டபோது, அந்நாட்டில் இருந்து பல லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். அவ்வாறு வெளியேறிய அகதிகளில் ஈரானில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் தஞ்சமடைந்தனர். இதனிடையே, இஸ்ரேலுடன் நடைபெற்ற போருக்குப்பிறகு, ஈரானில் உள்ள ஆப்கானியர்களை வெளியேற்ற ஜூலை 6-ம் தேதி கடைசிநாளாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில், ஈரான் விதித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை 7 லட்சம் ஆப்கானியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதம் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் ஆப்கானியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, சர்வதேச புலம்பெயர்வோர் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது வரை நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ஆப்கானியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆப்கானியர்களை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு மீண்டும் திரும்புவோர், உணவுக்காக கடும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்றும், பசியால் பலர் உயிரிழக்கக்கூடும் என்றும் ஐ.நா. தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.