கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் வேலைக்காக சென்றார். பின்னர். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து, 2014-ம் ஆண்டில் தனியாக கிளினிக் தொடங்கினார். இதில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரில், 2016-ம் ஆண்டு சிறைக்குச் சென்று வெளியே வந்த மஹ்தி, நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, மிரட்டியதாக கூறப்படுகிறது. தமது பாஸ்போர்ட்டை மீட்க முயன்ற நிமிஷா பிரியா, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஏமன் நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு, மரண தண்டனை விதித்தது. ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியருக்கு ஜூலை 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷாவை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி.பிரிட்டாஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும், ஏமன் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தி, செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டுமென அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. நிமிஷா பிரியா தூக்குத்தண்டனை விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் 16 ஆம் தேதி ஏமனில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் மத்திய அரசு அவசரமாக தலையிட வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் முறையிட்டார்.இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை 14 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தது.