சென்னை, நவம்பர் 24:
தமிழ்நாட்டில் இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது, “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) பணிகளுக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 4 வரை நீடிக்கும். இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத படிவங்கள் நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன. அனைவரும் தவறாமல் தங்கள் தகவல்களைச் சரியாக நிரப்பி வழங்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,”இந்த பணிகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 83,256 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 68,000 பேர் பிஎல்ஓ (Booth Level Officers), 33,000 தன்னார்வலர்கள், மேலும் 2,45,340 கட்சி ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். இந்தியா முழுவதும் எஸ்ஐஆர் பணிகளில் அதிகபேர் ஈடுபட்ட மாநிலம் தமிழ்நாடுதான்.
ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது அவசியம். வரைவு பட்டியல் வெளியான பிறகு பெறுபேறுகள் சரிபார்க்கப்பட்டு விடுபட்டவர்கள் சேர்க்கப்படுவர். ஆன்லைன் வழியாகவும் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. யாருடைய பெயரும் காரணமின்றி நீக்கப்படாது; நீக்கப்பட்டால் அதன் காரணம் தெரிவிக்கப்படும். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது,” என்றும் தெரிவித்தார்.