சென்னை, நவம்பர் 27:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் டிட்வா புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் கடந்த புதன்கிழமை காலை முதல் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு, ஆழமடைந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 730 கி.மீ., புதுச்சேரிக்கு 640 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் இப்புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை, சூரைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.