வங்கக் கடலில் அக். 27 அன்று ‘மோந்தா’ புயல் உருவாகிறது

Cyclone 'Montha' to form in Bay of Bengal on Oct. 27

சென்னை, அக்டோபர் 24:

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த சில நாட்களில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக் கடலில் நிலவிய தாழ்வு அமைப்பு மண்டலமாக வலுப்பெறாமல் வலுவிழந்ததால், நேற்று தமிழகத்தில் வானம் தெளிந்திருந்தது. ஆனால் இன்று வங்கக் கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால் வானம் மீண்டும் மேகமூட்டத்துடன் துளியிழை மழை பெய்து வருகின்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக ‘மோந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி, ஆந்திரம் நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மோந்தா புயல் நேரடியாக நிலப்பரப்பைத் தாக்காது என்றாலும், அது தொடர்பான மழைத் தாக்கம் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்பதையும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அக். 26ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் என்றும், அக். 28ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தற்போது நடுக் கடலில் நிலவுவதால், வங்கக் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் சின்னம் ஆந்திரக் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது தமிழகத்தில் பெரும் வெள்ளமோ அல்லது கடுமையான சேதங்களோ ஏற்படுத்தாது, கனமழை அளவிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை