டெல்லி, செப்டம்பர் 12:
தமிழகத்தைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்றார். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முஹம்மது ஹமீத் அன்சாரி மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு துணை தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ஆம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும் , பி.சுதா்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளும் பெற்ற நிலையில் 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.