கோவை மாணவி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு

Covai student sexually assaulted: Criminals arrested

கோவை, நவம்பர் 04:

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகில் தனிப்படை போலீசார், கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்தனர்.

இந்தக் குற்றவாளிகள் அனைவரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். காவலராக பணியாற்றியிருந்த சந்திரசேகரனுக்கு அரிவாளால் வெட்டு ஏற்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையின் தனியார் கலைக்கல்லூரியில் முதுநிலை படித்து வந்தார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிப் பாக விற்பனைக்கடை சார்ந்த 25 வயது இளைஞருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் காரில் வெளியே சென்றுள்ளனர். பின்னர், கோவை விமான நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் இரவு 11 மணியளவில் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் காருக்குள் இருந்த இருவரையும் வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அந்தக் கும்பலின் நடவடிக்கையைக் கண்டு அச்சமடைந்த அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதையடுத்து, அந்தக் கும்பல் காரை தடுத்து நிறுத்தி அரிவாளால் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்துள்ளனர். பின்னர், அந்த இளைஞரை தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அருகில் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில், இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் சந்திரசேகர் என்ற தலைமைக் காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே விழவே, அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது.

பின்னர், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீஸார், அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமைக் காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டட வேலை பார்த்து வருந்ததும் தெரியவந்துள்ளது.

அதில் கருப்பசாமி,காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கல்லூதி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!