சென்னை, நவம்பர் 15:
முன்னாள் அமைச்சர் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வரவிருக்கும் தமிழக தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் இன்று பேசிய அவர், “பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இங்கே தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இணைந்து பணிபுரிந்தால், தேர்தல் ஆணையம் வேறு எதுவும் செய்ய முடியாது,” என்றார்.
தவெக உடன் கூட்டணிக்கு முயற்சி செய்கிறோம் என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், “நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சில கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் எந்தக் கட்சியுடன் பேசுகிறோம் என்று இப்போது சொல்ல முடியாது. எவரையும் நான் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது எனவும், “எங்கில்லாமல் வெற்றி பெறுவது கடினம். வரும் தேர்தலில் எங்களுடன் இணையும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்,” என்று உறுதியாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,“2026ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் போட்டி திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்குமே இருக்கும். இது அரசியல் உண்மையை வைத்து சொல்லும் கருத்து மட்டுமே, கூட்டணியில் இணையப் போகிறோம் என்ற அர்த்தமல்ல,” என்றார்.