பீகார், செப்டம்பர் 24:
பீகார் மாநிலம், பாட்னாவில் இன்று காலை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடக்கப்படுவதால் வலுவான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இது சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக பீகாரில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டமாகும். கடைசியாக, 1940-ஆம் ஆண்டு பீகாரில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இந்திய சுதந்திர இயக்கத்தின் மிக முக்கிய மையமாக விளங்கிய சதகத் ஆசிரமத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்பட 170 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், பீகாரில் நடக்கும் வாக்கு மோசடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும், பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பற்றிய விவாதமும் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் நடைபெற்ற 16 நாள், 1,300 கி.மீ. தொலைவுக்கு செய்யப்பட்ட வாக்காளர் உரிமைப் பேரணி பற்றிய அனுபவங்களும் இக்கூட்டத்தில் பகிரப்படக் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் தெலங்கானாவில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தின் மூலம், அந்த மாநில தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக சோனியா காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வாக்குறுதிகள் வெளியிட்டது குறிப்பிடதக்கது. அதன் பின் பதவியேற்ற ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது முக்கிய வெற்றியாகும்.
பீகார் மாநிலத்திலும் அதே மாதிரி திட்டமிடல் மற்றும் அரசியல் செயல்பாடுகள் இக்கூட்டத்தில் சீரமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட உள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.