விழுப்புரம், ஆகஸ்ட் , 05:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. விருத்தாசலத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், “என் வீட்டில், என் அருகே யாரோ ஒட்டுக்கேட்பு கருவி வைத்துள்ளனர். இதை யார் வைத்தார்கள், ஏன் வைத்தார்கள் என ஆராய்ச்சி நடக்கிறது” என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அன்புமணிதான் தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என்றும், ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததே அவர் தான் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது, ராமதாசின் தொலைபேசி, வை-பை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் என புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணியின் மேலாளர் சசிகுமார் மூலமாக ராமதாஸ் இல்லத்தில் வை-பை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டதாகவும், அதன் மூலம் ராமதாசின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இந்த விவகாரத்தில் ஹேக் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.