சென்னை, ஏப்ரல் 01:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
அந்த வகையில் இன்று (ஏப்.1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 2043.50 ஆக இருந்த நிலையில் ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 203 ரூபாய் உயர்ந்துள்ளது.
மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், டீக்கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்கும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

