புதுக்கோட்டை, நவம்பர் 10:
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் கள ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ரூ.767 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவு செய்யப்பட்ட பணிகளைத் திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன்பின், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- அறந்தாங்கி வட்டத்தில் உள்ள வீரகொண்டான் ஏரி, செங்கழுநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் ரூ.15 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்படும்.
- கீரமங்களம் பகுதி விவசாயிகளுக்கான காய்கறி மற்றும் பழங்களை பாதுகாப்பாக சேமிக்கக் கூடிய ரூ.1.60 கோடி மதிப்பிலான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
- வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பில் உயர்நிலைப் பாலங்கள் கட்டப்படும்.
- புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் (Neo Tidal Park) நிறுவப்படும்.
- கந்தவர்வகோட்டை ஊராட்சிக்கு பேரூராட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
- பொன்னமராவதி பேரூராட்சிக்கு நகராட்சி அந்தஸ்து உயர்த்தப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், “மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடி ஆய்வு மேற்கொள்வது, ‘மக்களுக்காக, மக்களிடமே’ என்ற அரசின் அணுகுமுறையின் அடையாளம்” என்றார்.