சென்னை, செப்டம்பர் 08:
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை வந்தடைந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள், பேனர்கள் வழிநெடுகிலும் வைக்கப்பட்டன.
இந்த பயணத்தின் போது தமிழகத்திற்கு மிகப்பெரிய முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 17,613 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன.
ஜெர்மனியில் மட்டும் 26 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,020 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 15,320 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதேபோல், இங்கிலாந்தில் 7 நிறுவனங்களுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8,496 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2,293 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.