சென்னை, ஆகஸ்ட் 8:
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறையின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டுப் விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை தடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டார்.
மாநிலக்கல்வி முறையில் அரசுப் பள்ளிகளில் படித்து, ஐஐடி தொடங்கி, பல முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் வரை, அட்மிஷன் பெற்றுள்ள மாணவர்களையும் இங்கே பாராட்டிக் கொண்டிருக்கிறோம். இது சாதாரண நிகழ்ச்சி கிடையாது. நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறுகின்ற தமிழ்நாட்டினுடைய கல்வித்திருவிழா என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அறிவுத்திருவிழா என்று சொன்னால் அது மிக, மிக பொருத்தமாக இருக்கும்.
இந்தியாவிலேயே இன்றைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எண்ணற்ற சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு நேற்றல்ல, சங்க காலம் முதலே தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கி கொண்டுதான் வந்தார்கள். ஆனால், இடையில் ஏற்பட்ட சில வரலாற்றுச் சூழ்ச்சிகளால், தமிழ் மக்களுடைய கல்வியில் தடை ஏற்பட்டது. தடைபட்டது என்றால், அது ஏதோ தானாக ஏற்பட்ட தடை அல்ல. கல்வி உரிமை நமக்கு தடுக்கப்பட்டது. அப்படி தடுக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக உருவாகிய இயக்கம் தான் திராவிட இயக்கம்.
அப்படி போராடிப் பெற்ற கல்வியை, எப்படியாவது பறித்து விடலாம் என்று அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சூழ்ச்சிகளை பலர் செய்து கொண்டே வருகிறார்கள். இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குலக் கல்வித் திட்டம், மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என பலவழிகளிலும் நமது கல்வி உரிமையை சிதைக்க முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றது.
இப்போது, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற அந்த திட்டத்தை இன்றைக்கு மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று இன்னொரு வாழும் பெரியாராக போர்முரசு கொட்டியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
உங்களுடைய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கென்று நாங்கள் தனியாக கல்விக் கொள்கையை இயற்றிக் கொள்கிறோம் என்று தைரியமாக துணிச்சலுடன் சொன்னவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதோ, இன்றைக்கு இந்த மேடையில் தமிழ்நாட்டினுடைய புதிய கல்விக் கொள்கை இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.
சமீபத்தில், இதே அரங்கத்தில் நம்முடைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை’ நூலை, நம்முடைய முதல்-அமைச்சர் அவர்கள் தான் வெளியிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்-அமைச்சர் அவர்களுக்கு, மதம் பிடித்த யானையை அடக்குவதன் அடையாளமாக ஓர் அங்குசத்தை நினைவுப் பரிசாக கொடுத்தார். அந்த ‘அங்குசம்’ வெறும் அடையாளம் மட்டும்தான். இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த ‘தமிழ்நாடு கல்விக் கொள்கை’ என்பது தான், உண்மையான அங்குசம். மதம்பிடித்து, தமிழ்நாட்டின் கல்வியை அழிக்கத் துடிப்போரை அடக்குவதற்கான அங்குசம் தான் இந்த மாநிலக் கல்விக் கொள்கை என அவர் பேசினார்.