சென்னை, ஆகஸ்ட் 12:
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ரேஷன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வழங்கும் சேவைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் (அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை) போன்று அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட, 70 வயதுக்களை கடந்த 15,81,364 ரேஷன் கார்டுகளில் உள்ள 20,42,657 பயனாளிகள் மற்றும் 91,969 ரேஷன் அட்டையில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உள்ளடங்கும் 21,70,454 பயனாளிகள், வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் பெறும் வாய்ப்பு பெறுகின்றனர்.
ஒவ்வொரு, மாதம் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகளின் விவரங்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிலிருந்து பெறப்பட்டு, அந்தந்த பயனாளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
பொருட்கள் வழங்கும் வாகனங்களில் பாதுகாப்பு, மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு ஆகிய உபகரணங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தமாக ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.