சென்னை, நவம்பர் 15:
பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கப்படுவதாக அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்துடன் இணையாகப் பல நலத்திட்டங்களும் தொடங்கிவைக்கப்பட்டன. அவற்றில் பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்துதல், சுயதொழில் தொடங்கிட மானிய உதவித் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில் கூறியதாவது, “தூய்மைப் பணி என்பது வெறும் வேலை அல்ல, அது ஒரு சேவை. இரவு நேரங்களில் நகரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாலும், தூய்மைப் பணியாளர்கள் மட்டும் ஓய்வு அறியாமல் உழைக்கிறார்கள். அவர்களால்தான் சுகாதாரமான சுற்றுச்சூழல் உருவாகிறது. அவர்களின் சேவை உணர்வே இந்த மாநகரத்துக்கு பெருமை சேர்க்கிறது. அவர்களின் நலனைக் காக்கும் வகையில் இலவச உணவு வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்றார்.
முதற்கட்டமாக ரூ.186.94 கோடி செலவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 29,455 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.
அத்துடன், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டப்படவுள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் மக்கள் தாங்களே சுய ஒழுக்கத்துடன் குப்பைகளை முறையாக போட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.