கோவை, நவம்பர் 25:
கோவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோவை காந்திபுரத்தில் அமைந்திருந்த மத்திய சிறைச்சாலை வளாகம் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு நவீன வசதிகளுடன் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா தமிழின் செம்மொழித் தன்மை, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் தமிழ் மொழியின் வரலாற்று வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிற்பங்கள், கல்வி விளக்கப் பலகைகள் மற்றும் தலைமுறைகளைக் குறிக்கும் தளவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வு அம்சங்களும், பசுமை சூழலும் கொண்ட இந்த பூங்கா சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் தகவல் மையமாக பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பூங்காவைத் திறந்து வைத்ததுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் பொற்கோவை மண்டபத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பொன்முடி, கோவை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, மாநகர ஆணையர் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல்
இவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2023 அன்று செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கவும், தற்போது முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல், பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடம், நிலத்தடி நீர்த்தொட்டி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள், தரைத்தள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
பின்னர், பூங்காவில் உள்ள தமிழர் கொடை சிற்ப வனம், கடையேழு வள்ளல்கள் சிலைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, படிப்பகம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும், செம்மொழிப் பூங்காவில் மரக்கன்றினை நட்டார்.
அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஓராட்டுக்குப்பை கிராமத்தில் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் பங்களிப்புடன் 5 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள 86 புதிய வீடுகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.
செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள்
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா வளாகத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை மற்றும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக “மதி அங்காடி”-யும் நிறுவப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium), குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம், முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் க்யூஆர்(QR) குறியீடுகள் மற்றும் பார்கோட்(Barcode) போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன.