சென்னை, செப்டம்பர் 20:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று சென்னையின் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார் மற்றும் பயிற்சிக்கான கையேட்டை வெளியிட்டார்.
மேலும், ரூ.277 கோடியில் சென்னை-காமராஜர் சாலையில் பாரத சாரணர் தலைமை அலுவலக கட்டடம் மற்றும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் என 243 பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்பு, ரூ.94 கோடியில் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 59 பள்ளிகளில் கட்டப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் இதர கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் மற்றும் உயர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.