மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே, வங்கதேசத்திற்கு சொந்தமான பழைய விமான தளத்தை சீனா புதுப்பித்து வருவது, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேற்கு வங்கத்தின் சிலிகுரி இருந்து வருகிறது. சிலிகுரியில் உள்ள இந்த 22 கிலோ மீட்டர் நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 4.4 கோடி மக்களுக்கும், நாட்டின் 8 சதவீத நிலப்பரப்புக்கும் இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அருகே, நம் அண்டை நாடான வங்கதேசம், இரண்டாம் உலகப் போரின் போது கைவிட்ட விமான தளத்தை, சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டியெழுப்புகிறது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பின் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவியேற்ற முகமது யூனுஸ், சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் சீனா சென்றிருந்த அவர், சீனத் தலைநகர் பீஜிங்கில் பேசுகையில், நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் வடகிழக்கிற்கு, ஒரே கடல் பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் சிலிகுரி கோழி கழுத்து பகுதியை குறிவைக்கும் வகையில், போர்க்கால விமான நிலையத்தை வங்கதேசம் மீட்டெடுத்து வருகிறது. வங்கதேசத்திற்கு சொந்தமான பழைய விமான தளத்தை சீனா புதுப்பித்து வருவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.