டெல்லி, நவம்பர் 26:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025ஆம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான உயரிய விருதை வென்றுள்ளது. இந்த விருது, The Global Energy and Environment Foundation (GEEF) அமைப்பு நடத்தும் “Global Sustainability Awards 2025” நிகழ்வில், “Sustainable Urban Transport Project 2025” பிரிவில் சென்னை மெட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025 நடைபெறுகையில், நவம்பர் 20-ம் தேதி புதுடெல்லி ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு வாழ்த்து விழாவில், மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக்கிடம் இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா மற்றும் நிறுவனத்தின் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை மெட்ரோவின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த அங்கீகாரம் முக்கியமானதென அவர்கள் குறிப்பிடினர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் அமல்படுத்தலில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து நிலையான போக்குவரத்து வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. அறிவியல் அடிப்படையில் மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு போன்ற முயற்சிகள் இதில் அடங்கும்.
இந்த அங்கீகாரம், சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. நகர வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்லும் மாதிரி திட்டமாக சென்னை மெட்ரோவை உலக அரங்கில் இவ்விருது முன்னிறுத்துகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான நிலைத்தன்மை முயற்சிகளுக்கு முன்னதாகவே அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டிலும் உலகளாவிய நிலைத்தன்மை விருதை (Global Sustainability Award) பெற்றிருந்தது; இப்போது 2025ஆம் ஆண்டின் நிலையான நகர்ப்புற போக்குவரத்து திட்ட விருதும் சேர்ந்து, சென்னை மெட்ரோவின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய மைல் கல் பதிக்கப்பட்டுள்ளது.