சென்னை, டிசம்பர் 08:
தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று 08-12-2025 முதல் 14-12-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.