மதுரை, ஜூலை 18:
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை பெயரில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தக் கொலைக்கான விசாரணையில், சம்பந்தப்பட்ட போலீசாரான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர் மணிகண்டன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாக மதுரை மற்றும் திருபுவனத்தில் முகாமிட்டு கோவில் அலுவலகம், வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சம்பவ இடங்களை நுணுக்கமாக சிபிஐ அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக கருதப்படும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், கோவில் கார் டிரைவர் கார்த்திவேல், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித்குமாருடன் பணியாற்றிய வினோத் குமாரும், பிரவீனும் – இந்த ஐவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இன்று காலை, மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முக்கியமான விளக்கங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் விசாரணை மாலை வரை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சிறையில் உள்ள ஐந்து போலீசாரின் செல்போன்கள் சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, தொழில்நுட்ப விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த செல்லிண் தரவுகள் – எப்போது, யாருடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள் அல்லது குறிப்பிடத்தக்க நபர்களுடன் தொடர்பு இருந்ததா போன்ற விவரங்களை ஆழமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. செல்போன் பதிவுகளிலும் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.