டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து – 10 பேர் பலி

Car explosion near Delhi's Red Fort - 10 dead

டெல்லி, நவம்பர் 11:

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் அந்த கார் வெடித்து சிதறியது. வெடிப்பு நடந்த பகுதி சாந்தினி சவுக் சந்தை உள்ளிட்ட மக்கள் கூட்டம் நிறைந்த வணிக மையங்களுக்கு அருகே அமைந்திருந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பலர் அலறியடித்து தப்பியோடியதால் அந்த பகுதி குழப்பநிலைக்கு ஆளானது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 7 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயிலிருந்து வேன், ஆட்டோ, கார் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

காயமடைந்தவர்கள் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக மாற்றப்பட்டனர். மருத்துவமனையில் பலர் தீக்காயங்கள் காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு விபத்தா, அல்லது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மாதிரிகளை சேகரித்தனர். தடயவியல் நிபுணர்கள் வெடிப்பு மையம் மற்றும் வாகன எஞ்சிய தடயங்களை தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறையின் சிறப்புப் பிரிவு, உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணியிலும், காயமடைந்தவர்களின் தகவல் உறுதிப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

வெடித்த காருக்கு ஹரியானா மாநிலத்தின் பதிவெண் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் காரின் உரிமையாளர் சல்மான் என்ற நபர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த வெடிப்பில் நேரடி தொடர்புடையவர் தானா என்பதையும், கார் எவ்வாறு அந்த இடத்துக்கு வந்தது என்பதையும் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்கிறார்கள்.

மேலும் இச்சம்பவத்தையடுத்து செங்கோட்டை பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், மெட்ரோ நுழைவாயில்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கார் வெடிப்பு, டெல்லியில் மக்கள் கூட்டம் அதிகமாகும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நடந்ததால், மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் அவசரக் கூட்டத்தையும் நடத்தி, விசாரணையை முழுமையாக NSG மற்றும் NIA க்கு ஒப்படைத்துள்ளது

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்