மதுரை, டிசம்பர் 06:
மதுரையில் தொழில் முதலீட்டாளர் மாநாடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு விழா நாளை நடைபெற உள்ளன. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.
இதனையடுத்து, முதலமைச்சர் இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்படயுள்ளார். அவரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்க உள்ளனர்.
முதலமைச்சர் இன்று இரவு மதுரையின் அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்க இருப்பார். மேலும், கருப்பாயூரணியில் நடைபெறும் மக்கள் விடுதலை கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்.
இதனைத் தொடர்ந்து நாளைய நிகழ்ச்சிகளின் முதலில், மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார்.
அடுத்ததாக காலை 10 மணிக்கு விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் தொழில் முதலீட்டாளர் மாநாடு துவங்கி, மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்து செய்யும் நிகழ்வும் நடைபெறும்.
பின்னர் மதுரை உத்தங்குடியில் அரசு சார்பில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1 லட்சத்து 67 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுவினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார்.
மேலும், முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைப்பார்.
பின்னர் விழா முடிவடையதும், பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் திரும்ப சென்னைக்கு செல்லுவார்கள்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையம், விழா நடைபெறும் பகுதிகள் மற்றும் முதலமைச்சர் தங்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பாதுகாப்பு காரணமாக இன்றும் நாளையும் மாவட்டத்தின் பல இடங்களில் டிரோன் பறக்கும் தடை விதிக்கபட்டுள்ளது.