கர்னூல் , அக்டோபர் 25:
ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற பயங்கரமான ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவரும் அடங்கும். இவ் விபத்தின் காரணம் மற்றும் நேரடி காட்சிகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவுக்கு 42 பயணிகளுடன் புறப்பட்ட காவேரி டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான லக்சுரி ஆம்னி பஸ், நேற்று அதிகாலை 3 மணியளவில் கர்னூல் மாவட்டம் சின்னதேகூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனம் பேருந்தின் கீழ் சிக்கியதில், அதன் எரிபொருள் டேங்க் வெடித்து பேருந்து முழுவதும் தீப்பற்றி சில நிமிடங்களிலேயே எரிந்துவிட்டது.
பேருந்தில் பணக்கட்டுகள், ஆபரணங்கள், 234 செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் இருந்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த சாதனங்களின் பேட்டரிகள் வெடித்து தீ பரவலில் முக்கிய பங்காற்றியதாக தடயஅறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து டயர் வெடித்ததும் சில வினாடிகளில் தீ பேருந்து முழுவதிலும் பரவத் தொடங்கியதாக உயிர் தப்பியோரில் சிலர் கூறினர். பலர் கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பியிருந்தனர். பின் பகுதியில் இருந்தவர்கள் பின்கண்ணாடியை உடைத்து தப்பினர். சிலர் கைகளை, கால்களைப் பயன்படுத்தி கண்ணாடி உடைக்க முடியாமல் எரிந்து பலியானார்கள்.
ஓட்டுநர்கள் விபத்துக்குப் பிறகு பயணிகளை எச்சரிக்காமலும், கதவுகள் திறக்காமலும் குதித்து ஓடிவிட்டதாகவும் விபத்தில் தப்பித்த பயணிகள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
உயிர் தப்பிய அஷ்வின் என்ற ஒரு பயணி கூறியதாவது:
“தீப்பற்றியதும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றி தீ அணைக்க முயன்றார். பின்னர் மணலை வீசி முயன்றார். ஆனால் பயம் அடைந்தவர் தப்பிக்க முயன்று, முன் கதவை திறக்காமல் ஓடிவிட்டார். அதனால் பலர் சிக்கினர். நான் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன்,” என்றார்.
பேருந்தில் தீ அணைக்கும் கருவி, ஜன்னலை உடைக்கும் சுத்தியல் ஆகிய அவசர கருவிகள் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவே உயிரிழப்பை பெரிதாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்தை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமய்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 8ம் வகுப்பு தேர்ச்சி என போலிசான்றிதழ் தாக்கல் செய்து கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தார் என போலீஸ் கூறியுள்ளது. இது தற்போது விசாரணை மையப் புள்ளியாக மாறியுள்ளது.
20 பேரில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. இதில், இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தால் கர்னூல் மாவட்டம் முழுவதும் துயரம் நிலவுகிறது. மேலும் சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயஅறிவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.