ராயக்கோட்டை, செப்டம்பர் 22:
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நந்தலால் மற்றும் அவரது மனைவி ரேகா தம்பதியருக்கு மூன்றரை வயதில் சத்யா என்ற மகன் உள்ளார்.இவர்கள் தங்கியிருப்பது மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருடைய பசுமை குடிலில் ஆகும். நந்தலால் அங்கு கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 31-ஆம் தேதி சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது தெருநாய்கள் சத்யாவின் முகம் மற்றும் கையைக் கடித்து காயங்களை ஏற்படுத்தியது. சிறுவனின் அழுகை குரலை கேட்டு பெற்றோர் அவனை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை முடிந்து சில நாள்களுக்கு முன்பு சிறுவன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால் நேற்று மாலை வீட்டில் மயங்கி விழுந்துள்ள நிலையில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கெலமங்கலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.