புதுச்சேரி, ஜுலை 21:
புதுச்சேரி நீதிமன்ற வளாகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி – கடலூர் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். இங்கு தினமும் வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள், போலீசார், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற இ-மெயிலுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்றம் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மிரட்டல் விடுக்கும் நபர் யார் என்பது குறித்து தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.