டெல்லி, செப்டம்பர் 12:
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை 11.40 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. இதன் பிறகு மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு காரணமாக, நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பாதுகாப்பு முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுவரை எந்தவிதமான வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியா முழுவதிலும் சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவதை போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.