விழுப்புரம், ஜனவரி 24:
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டியில் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரண்டு கார்களை பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆட்களை வைத்து உடைத்ததாக மாவட்டத் தலைவர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக தர்மராஜ் இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகம் நாளை வருகை தர உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்பதற்காக அதற்கான செலவு ரூபாய் மூன்று லட்சம் மேலிடத்திலிருந்து மாவட்ட தலைவர் தர்மராஜ் பெற்றுள்ளார்.
இந்த பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், நேற்று நள்ளிரவில் தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் தனது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி வாகனங்களை அடித்து உடைத்து தனது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாவட்டத் தலைவர் தர்மராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் தென்னரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பொது இடத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.