டெல்லி, ஜூலை 28:
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கியதும், இரு அவைகளிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்களை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்த அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டத் தொடரின் முதல் வாரம் குறிப்பிடத்தக்க விவகாரங்கள் எதுவும் நடைபெறாமலேயே முடிந்தது.
“அனைத்து முக்கிய விவகாரங்களை விவாதிக்கத் மத்திய அரசு தயாராக இருந்தும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு ஒரு வாரத்தையும் வீணடித்துவிட்டனர்” என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டினார்.
விடுமுறைக்கு பிறகு இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியுள்ள நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்தே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி, பிரியங்கா காந்தி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது நாடாளுமன்ற வளாகத்தில் பேனர்கள் ஏந்தி முழக்கமிட்டனர்.