பீகார், நவம்பர் 14:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்திய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வெற்றிக்கு வலுவான பாதையில் பயணிக்கிறது. இதேவேளையில், இந்தியா கூட்டணி 32 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியில் முக்கிய பங்காற்றும் காங்கிரஸ் கட்சி மொத்தம் 61 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தற்போதைய எண்ணிக்கை நிலவரப்படி கிசன்கஞ்ச் மற்றும் பாகல்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலேயே முன்னிலை பெற்றுள்ளது.
கிசன்கஞ்ச்சில் காங்கிரஸ் வேட்பாளர் 24,058 வாக்குகள் வித்தியாசத்திலும், பாகல்பூரில் 4,000 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார். இதைத் தவிர்ந்த பிற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணவில்லை.
தனித்துப் போட்டியிட்ட அஸாரூதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி பீகார் வடபகுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் தற்போது வலுவான முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜோகிஹாட், பஹதூர்கஞ்ச், தாக்கூர்கஞ்ச், அமோர், பைசி, கோச்தாமன் ஆகிய ஆறு தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை பெற்றுள்ளது. அமோர் தொகுதியில் அந்தக் கட்சி வேட்பாளர் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஜோகிஹாட் மற்றும் கோச்தாமனில் தலா 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார். மற்ற தொகுதிகளில் சராசரியாக 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் ஏஐஎம்ஐஎம் வலுவாக உள்ளது.
ஓவைசியின் கட்சியின் இந்த முன்னிலை பீகார் அரசியலில் புதிதாக ஒரு வலய வாக்கு போக்கை உருவாக்கி இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதேவேளையில், காங்கிரஸின் குறைந்த முன்னிலை மகாகத்பந்தன் கூட்டணிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.