பாட்னா, அக்டோபர் 06:
பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமல்படுத்தி வருகிறது. பீகார் சட்டசபையின் 243 உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 நவம்பர் 22-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். 17 புதிய நடைமுறைகள் பீகார் தேர்தலில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட உள்ளார்.
2020-ஆம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களில் நடந்தது. அதாவது அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் நடைபெற்று, நவம்பர் 10-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன. இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.