சென்னை, ஜனவரி 14:
போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று அதிகாலை பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்ததால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொங்கலை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் “பழையன கழிதலும், புதியன புகுதலுமாக…” வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று போகி கொண்டாட்டத்தையொட்டி வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். இதனால் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சேர்ந்துகொண்டதால், கடுமையான புகை மூட்டம் காரணமாக சாலைகளில் வருபவர்கள், வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏறியவிட்டவாறு வாகனங்களை இயக்கிச் சென்றனர்.
சென்னை பெருங்குடி, வேளச்சேரி, ராயபுரம் மற்றும் வடபழனி பகுதிகளில் கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளிவில் இருந்து உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டி – 196, மணலி – 144, கொடுங்கையூர்- 123, அரும்பாக்கம் – 177, காந்தி நகர்(எண்ணூர்) – 144, பெருங்குடி – 103, வேளச்சேரி – 76, ராயபுரத்தில் – 64 ஆகவும் உள்ளது.