பெங்களூரு, அக்டோபர் 21:
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு–ஒசூர் மெட்ரோ ரயில் திட்டம் தொழில்நுட்ப ரீதியில் நடைமுறைப்படுத்த இயலாது என்று பெங்களூரு மெட்ரோ ரயில் லிமிடெட் (பிஎம்ஆர்எல்) கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், பெங்களூரு மற்றும் ஹொசூர் மெட்ரோ ரயில்கள் வெவ்வேறு மின்சார இயக்க அமைப்புகள் பயன்படுத்துவதால், ஒரு இணைந்த மெட்ரோ பாதையை உருவாக்குவது சாத்தியமற்றது என கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒசூரிலிருந்தும், அதேபோல் ஒசூரிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பெங்களூரிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற எதிர்பார்ப்பில் இரு மாநிலங்களின் மெட்ரோ நிறுவனங்களும் ஆலோசனைகளை தொடங்கியிருந்தன.
திட்டத்தின் படி, தமிழ்நாடு எல்லைக்குள் வரும் பகுதியில் சென்னை மெட்ரோ நிறுவனம் (CMRL) மற்றும் கர்நாடக எல்லைக்குள் வரும் பகுதியில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் (BMRL) பணிகளைச் செய்துவரும் வகையில் முன்வைக்கப்பட்டது. வழித்தடம், நிலையங்கள், கட்டமைப்பு வரைவு முதலியவையும் உருவாக்கப்பட்டிருந்தன.
பிஎம்ஆர்எல் அறிக்கையில், பெங்களூரு மெட்ரோ தற்போது அனைத்து வழித்தடங்களிலும் 750 வோல்ட் டிசி உயர்மட்ட மின்கேபிள் முறை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே அமைப்பு பொம்மசந்திரா–அத்திப்பள்ளி பகுதிக்கான திட்டத்திலும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், சென்னை மெட்ரோ நிறுவனம் முழுமையாக 25 கிலோவோல்ட் ஏசி (AC) தொழில்நுட்ப முறைமை மூலம் ரயில்களை இயக்கி வருகின்றது. ஒசூர்–பொம்மசந்திரா இடையிலான சுமார் 23 கிலோமீட்டர் நீளப் பாதைக்கும் இதே முறைமைப் பயன்பாட்டைத் திட்டமிட்டிருந்தது.
இந்த மாறுபட்ட மின் இயக்க முறைகளை ஒரே ரயில் சேவையுடன் இணைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று பிஎம்ஆர்எல் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு இரண்டும் இணைந்து ஆலோசிக்க வேண்டுமென பெங்களூரு மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.