சென்னை, ஜூலை 21:
அதிமுகவில் நீண்ட வருடங்கள் முக்கிய நிர்வாகியாக இருந்த முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, இன்று மீண்டும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாகவே அதிருப்தியில் இருந்ததாகவும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலிருந்து மனவெறுப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, எம்ஜிஆர் காலம் முதல் அதன் அடிப்படை உறுப்பினராக இயங்கி வந்துள்ளார். 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிமுக மத்தியில் தனித்துவமான புகழைப் பெற்றவர். எம்ஜிஆர் அவரை முக்கிய ஆலோசகராகவும், ஆட்சிமன்ற குழுவில் வைத்திருந்தார். அமைச்சராகவும், எம்.பி.-யாகவும் இவர் செயல்பட்ட அனுபவம் பெற்றவர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அன்வர் ராஜா தலைமையேற்ற அதிமுக தலைமைகளுக்கு ஆதரவு அளித்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், பாஜகவுடன் கூட்டணி எதிர்ப்பு, சசிகலாவுக்கு ஆதரவு, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பின்னர், 2023-ல் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை மீண்டும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.