பீகார், நவம்பர் 14:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு பதிவு செய்த கருத்து அரசியலில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
பீகாரில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மதியம் வரை தீவிரமாக நடைபெற்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 204 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுவதால், என்டிஏ ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகளைக் குறித்துப் பிரதமர் மோடி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த குஷ்பு, “வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பும் காரணமும் இதுவே” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது மற்றொரு பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சில தலைவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள். மக்கள் நலனுக்காக ஆற்றிய சேவைகள் அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளன” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கள் பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ள வீழ்ச்சியைப் பிரதிபலிக்கின்றன என அரசியல் வட்டாரங்கள் விமர்சனம் செய்கின்றன. இந்தியா கூட்டணியின் பல குறைபாடுகள் தேர்தலில் வெளிப்படைந்துள்ளதாகவும், இதனால் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் முன்னிலையில் இருப்பதாகவும் காணப்படுகிறது.