சென்னை ,ஜூலை 15:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 2025-ஆம் ஆண்டிற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபாலசுந்தர ராஜ் இன்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்காக மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாக இருக்கும் என்றும், அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மேலும் காலிப்பணியிடங்கள் கிடைக்குமானால், கலந்தாய்விற்கு முன் அது அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று முதல் அதாவது ஜூலை 15, 2025 முதல் ஆகஸ்ட் 13, 2025 வரை விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத்தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் யு.பி.ஐ. (UPI) போன்ற முறைகளில் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 13-வது முறையாக, ஆண்டுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வாணையம் அறிவித்த தேதியில் ஏற்றத்தாசியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்வர்களின் நலன் கருதி, தொகுதி IIA-க்கு உரிய தேர்வு திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
2018 முதல் 2025 வரை, இது முதல் முறையாக தொடர்ந்து 2 ஆண்டுகள், 2024 மற்றும் 2025-இல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.