அன்புமணி நீக்கமா? – நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்

Anbumani remove from PMK ? – Ramadoss

திண்டிவனம், செப்டம்பர் 03:

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமாக பரபரப்பாக உள்ளது. இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுள்ளனர்.

அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை அன்புமணியின் மீது சுமத்தி, கடந்த ஆகஸ்ட் 31-இல் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அன்புமணியும் அவரது தரப்பினரும் இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

இதனால், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூட்டம் நடத்தி, அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை ராமதாஸிடம் தெரிவித்தனர். இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, ராமதாஸ் நாளை முக்கிய முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தின் முக்கிய செயலாளர்கள் உட்பட பலர் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் அன்புமணி மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் விவாதித்தார். கூட்டத்தில் ராமதாசின் மகளும், பிற முக்கிய பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 22 மாநில நிர்வாக உறுப்பினர்கள், ராமதாஸ் மற்றும் அவரது மகள்கள் கலந்து கொண்டு, அன்புமணி தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரைகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை விவாதிக்கின்றனர்.

அன்புமனியை கட்சியில் இருந்து நீக்குவாரா அல்லது மேலும் அவகாசம் வழங்குவாரா என்பதற்கான தீர்மானம் இந்த கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவின் விவரங்களை டாக்டர் ராமதாஸ் நாளை செய்தியாளர்ளை சந்தித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!