சென்னை, அக்டோபர் 30:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் நவம்பர் 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டம் சென்னை தி.நகரில் அமைந்துள்ள அக்கார்டு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமன்றி, அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ஆஸ்டின் ஆகியோர் நேரடியாக கட்சித் தலைவர்களைச் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.
பூச்சி முருகன், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், தமகா தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மற்றொரு தி.மு.க. தலைமை நிலையச்செயலாளரான துறைமுகம் காஜா, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் சீமான், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் முஸ்லிம் அமைப்புத் தலைவர்கள் காதர் மொய்தீன், நெல்லை முபாரக், தமீமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.
அதேபோல், ஆஸ்டினும் பல்வேறு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அதிமுக தொண்டர் உரிமை இயக்கத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பொன்குமார், பஷீர் அகமது உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
திமுக தலைமையிடம் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு மட்டும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்படவில்லை.
இதற்கிடையில், கடந்த சில காலமாக திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ்க வெற்றிக் கழக தலைவர் விஜயின் கட்சி சார்பில் இந்த கூட்டத்தில் யார் பங்கேற்கிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.