சென்னை, அக்டோபர் 25:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,மழை பாதிப்புகளை சமாளிக்க மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களுக்கு வழங்க தேவையான பொருட்கள் அனைத்தும் முன்கூட்டியே கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “நீர்வளத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலில் நிலைமை மோசமடைந்துள்ளதால், அக்டோபர் 24-ஆம் தேதி மீன்பிடிக்கப் புறப்பட்ட மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் உருவாவதால், கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை, இடி, மின்னல் தாக்கியதால் அக்டோபர் 1 முதல் 25ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 31 பேர் உயிரிழந்ததோடு, 47 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து துறைகளும் இணைந்து வடகிழக்கு பருவமழையை திறம்பட கையாள தயாராக உள்ளன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அமைச்சர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.