சென்னை, பிப்ரவரி 04:
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டுப் புகார் உண்மையில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய திருட்டு வழக்கு விசாரணைக்குத் தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது நிகிதா என்பவர் கொடுத்த புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகி இருக்கிறது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர், தனிப்படைக் காவலர்கள் என 10 பேருக்குமே தொடர்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதி ஸ்ரீமதி, “ஏதுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள், மனமே பதறுகிறது. ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டனர்.
அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்று கூறி இந்த வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ, டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப். 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.