ஈரோடு, நவம்பர் 1:
அதிமுகவின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் கட்சி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “பழனிசாமி பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு, 2019, 2021, உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தல் என அதிமுக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோல்வியைக் காணாதவர், ஜெயலலிதா ஒரு முறை தோற்றால் மறுமுறை வெற்றியைக் காண்பார். ஆனால், ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆட்சி செய்த பழனிசாமி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.”
செங்கோட்டையன், அதிமுகவின் பொதுச் செயலர் பழனிசாமி நேற்று அவரை கட்சியிலிருந்து நீக்கியதையும் சுட்டிக்காட்டினார். பசும்பொன்னில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“அதிமுகவுக்காக நான் அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்று பத்து நாள்களுக்குள் பேச்சு தொடங்குங்கள் என்று வலியுறுத்தினேன். ஆனால், என்னை கெடு விதித்ததாக செய்திகள் வெளியாகின. நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் என் கருத்தை முன்வைத்தேன்.
இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். ஆனால், அதன் பிறகு எனது கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன.
அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களே, அதனை நிறைவேற்றவே என எனது கருத்தை சொன்னேன். ஒருவேளை, 2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், என்னைத்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.