சென்னை, ஜூலை 18:
தமிழ்நாட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) படிப்புகளுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2024-25 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடை பெறுகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை கீழ், அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான பதிவு துவங்கியது. அரசு கல்லூரிகளில் மொத்தம் 160 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன; 17 தனியார் கல்லூரிகளுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டில் 800-க்கும் மேல் இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட பிஎன்ஒய்எஸ் பட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 17 முதல், ஆகஸ்ட் 1, மாலை 5 மணி வரை tnhealth.tn.gov.in மற்றும் tnayushselection.org ஆகிய இணையதளங்களில் நடைபெறுகிறது. அரசு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை நேரில், தபால் அல்லது கோரியர் மூலம் சென்னையில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் ஆகஸ்ட் 1, மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். தனியார் கல்லூரிகளுக்கு நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு நேரடி சேர்க்கை அந்தக் கல்லூரிகளின் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விரைந்து விண்ணப்பிக்கலாம்.