சென்னை, அக்டோபர் 10:
சென்னையில் 19 மண்டலங்களில் நாளை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற முகாம்களில் மட்டுமல்லாமல், ஆன்லைனிலும் ரேஷன் கார்டில் பெயரை நீக்கவும் சேர்க்கவும் செய்யலாம். தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் இணையதளமான www.tnpds.gov.in அல்லது இ சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.