சென்னை, ஜூலை 7:
இமாச்சல பிரதேசத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத், மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் அமைச்சர் இல்லை என அலட்சியமாக பதிலளித்துவிட்டுச் சென்றது பொதுமக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில், மேக வெடிப்புக்காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை, மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவுகளால், ஏராளமான வீடுகளும், சாலைகளும் சேதமடைந்தன. இந்நிலையில், மண்டி தொகுதி மக்களவை உறுப்பினரான நடிகை கங்கனா ரணாவத், மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட செல்லவில்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஞாயிறு அன்று, மண்டி தொகுதிக்குச் சென்று, மழை, வெள்ள பாதிப்புகளை கங்கனா ரணாவத் பார்வையிட்டார். அப்போது, மழை, பாதிப்புகள் குறித்து பார்வையிட வராதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரணாவத், எம்.பி. என்ற முறையில், நிதியை கொண்டு வருவதும், கள நிலவரங்களை ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்துவது மட்டுமே தமது பணி என தெரிவித்தார். மேலும், தாம் அமைச்சராக இல்லாததால், மக்களுக்கு எந்தவிதமான உதவியையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் அலட்சியமாக கூறிவிட்டுச் சென்றது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.