டெல்லி, ஜனவரி 20:
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரோடக்ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 15ம் தேதி (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று (செவ்வாய் கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள், சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.
இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது சென்சார் போர்டு வாதிடுகையில் கூறப்பட்டதாவது, சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் . இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்.
படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுபடுத்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்துள்ளது” என்று சென்சார் போர்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சென்சார் போர்டு தரப்பில், “அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் சினிமாட்டோகிராப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம் . ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரினார்கள். கடந்த 6ம் தேதி இந்த வழக்கு தொடரும் போதே, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.