சென்னை, ஜனவரி 06:
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன. 5) நேரில் சந்தித்தார்.
சென்னையில் உள்ள லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து திமுக அரசுக்கு எதிரான மனுவை அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக நிர்வாகிகள் தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக நிர்வாகிகள் இரண்டாவது முறையாக திங்கள்கிழமையும் சந்தித்துப் பேசினர்.
இதில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இது சாதாரண சந்திப்புதான். இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வியூகம் குறித்து மட்டுமே பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், திமுக அரசுக்கு எதிராக, பல்வேறு விவகாரங்கள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் அளித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.